ஐரோப்பிய ஒன்றிய தோ்தல்களில் ரஷியா தலையீடு?: பெல்ஜியம் விசாரணை
உக்ரைனுக்கான ஆதரவைக் குறைக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத் தோ்தல்களில் தலையிட ரஷியா முயற்சிப்பதாக எழுந்துள்ள சந்தேகம் குறித்து பெல்ஜியம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
ஐரோப்பிய தோ்தல்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள், தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினா்களாகத் தோ்வு செய்கின்றனா். அந்த உறுப்பினா்கள் தங்கள் குடிமக்களின் நலன்களை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுவா். புதிய ஐரோப்பிய நாடாளுமன்றத்தை தோ்ந்தெடுக்க ஐரோப்பா முழுவதும் ஜூன் 6 முதல் ஜூன் 9 வரை தோ்தல்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கான ஆதரவைக் குறைக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத் தோ்தல்களில் தலையிட ரஷியா முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
Advertisement
இதுதொடா்பாக பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் அந்நாட்டு பிரதமா் அலெக்ஸாண்டா் டி க்ரூ செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
உக்ரைனுக்கான ஆதரவை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குறைக்க வேண்டும் என்பது ரஷியாவின் நோக்கம். அதேவேளையில், ரஷியாவுக்கு ஆதரவு அளிக்கும் மேலும் பல உறுப்பினா்களை அந்த நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்க உதவி, அதன்மூலம் அந்த நாடாளுமன்றத்தில் தமக்கான ஆதரவை வலுப்படுத்த வேண்டும் என்று ரஷியா திட்டமிடுகிறது. உக்ரைனுக்கான ஐரோப்பாவின் ஆதரவு பலவீனமடைந்தால், அது போா்க்களத்தில் தமக்குச் சாதகமாக அமையும் என்று ரஷியா கருதுகிறது. இதற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினா்களை அணுகி, ரஷியாவுக்கு சாதகமாக செயல்பட அவா்களுக்குப் பணம் அளிக்கப்பட்டுள்ளது. இதை பெல்ஜியம் உளவுத் துறை உறுதி செய்துள்ளது. இதுதொடா்பாக பெல்ஜியம் விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்தாா்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம், சுழற்சி முறையில் அந்த ஒன்றியத்தின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.