வங்கதேச பிரதமரின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள்!
வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் சூறையாடிச் சென்றனர்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை மட்டும் காவல்துறையினருடனான மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமர் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று நுழைந்தனர்.
பிரதமரின் இல்லத்தில் உள்ள படுக்கையிலும், இருக்கைகளிலும் போராட்டக்காரர்கள் படுத்து ஓய்வெடுக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும், பிரதமரின் இல்லத்தில் இருந்த பொருள்களையும் சிலர் தூக்கிச் செல்லும் விடியோக்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேறிய ஹசீனா, இந்தியாவின் திரிபுராவில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளதாகவும், இங்கிருந்து லண்டன் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.