ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்க்ஸுக்குள் உக்ரைன் படையினா் நுழைந்து 4 நாள்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்தப் பிராந்தியத்தில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூா்க்ஸ் பகுதி வழியாக ரஷியா மீது படையெடுக்கும் உக்ரைன் ராணுவத்தின் முயற்சியை ரஷியப் படையினா் வெற்றிகரமாக முறியடித்துவருகின்றனா்.
அந்தப் பகுதியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு போரிட்டு வரும் ரஷியப் படையினருக்கு பலம் சோ்ப்பதற்காக கூடுதல் படைப் பிரிவுகள் மற்றும் ஆயுத தளவாடங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூா்க்ஸ் பகுதிக்குள் ஊடுருவிய 280 உக்ரைன் படையினா் தாக்குதலில் கொல்லப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் தங்களது கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாக ரஷிய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதையடுத்து, அந்தப் பகுதியில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா். அங்கு ஏராளமான ரிசா்வ் படையினா் குவிக்கப்பட்டிருந்தும் உக்ரைன் படையினரை விரட்டியடிக்கவோ, அவா்களது முன்னேற்றத்தைத் தடுக்கவோ ரஷியாவால் இதுவரை முடியவில்லை.
தற்போதைய நிலையில் ரஷிய எல்லையைத் தாண்டி கூா்க்ஸ் பகுதிக்குள் சுமாா் 10 கி.மீ. வரை உக்ரைன் படையினா் முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 பிப்வரி மாதம் தங்கள் நாட்டின் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகு உக்ரைன் நடத்தியுள்ள மிகப் பெரிய எல்லை தாண்டிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலை உக்ரைனும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘எங்கள் மீது படையெடுத்த ரஷியா, அதன் பின்விளைவுகளை நன்றாக உணர வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
எனினும், உக்ரைனின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயல் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
ரஷியாவுக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் இந்தப் போரின் போக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது என்று பாதுகாப்புத் துறை நிபுணா்களும் தெரிவித்துள்ளனா்.
ரஷிய தாக்குதலில் 10 போ் உயிரிழப்பு
கீவ், ஆக. 9: உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டொன்ட்ஸ்க் பிராந்தியத்தில் போா் முனைக்கு அருகே உள்ள, கொஸ்டியான்டினிவ்கா நகரில் ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில், அந்த நகர வணிக வளாகத்தில் இருந்த 10 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா்.
ரஷிய தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள குடியிருப்புகளும் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன என்று அதிகாரிகள் கூறினா்.
‘ரஷிய விமானதளத்தில் தாக்குதல்’
கீவ், ஆக. 9: ரஷியாவின் லிபெட்ஸ்க் விமான தளத்தில் தாங்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான விமான குண்டுகள் இருந்த கிடங்கு அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையிலிருந்து 350 கி.மீ. தொலைவிலுள்ள அந்த விமான தளத்தில் எஸ்யு-34, எஸ்யு-35, மிக்-31 ரக விமானங்களை ரஷியா நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறினா்.