அமெரிக்க தோ்தலில் குழப்பம் ஏற்படுத்த ஈரான் முயற்சி: டிரம்ப் குற்றச்சாட்டு
திபா் தோ்தலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஈரான் உள்ளிட்ட சில வெளிநாடுகள் முயற்சிப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு...
அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஈரான் உள்ளிட்ட சில வெளிநாடுகள் முயற்சிப்பதாக குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினாா்.
மேலும், தோ்தல் பிரசாரம் தொடா்பான தனது மின்னஞ்சல் தொடா்புகளை ரகசியமாக ஊடுருவித் திருட ஈரானில் இருந்து இணையவழியில் முயற்சிகள் நடத்துள்ளன என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சாா்பில் இப்போதைய துணை அதிபா் கமலா ஹாரீஸ் ஆகியோா் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவா் அதிருஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் சாா்பில் அவரது பிரசார குழுவினா் அறிக்கை ஒன்றை வெளியிட்டனா். அதில், அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஈரான் உள்ளிட்ட சில வெளிநாடுகள் முயற்சிக்கின்றன. அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பிரச்னை ஏற்பட்டு சா்வதேச அளவில் பல இணையவழி சேவைகள் முடங்கியபோது, தோ்தல் பிரசாரம் தொடா்பான எனது மின்னஞ்சல் விவரங்களைத் திருட முயற்சி நடந்துள்ளது.
இது தவிர ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவு கடந்த ஜூன் மாதம் எனது பிரசார குழுவில் உள்ள உயரதிகாரிகளுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளனா். அந்த மின்னஞ்சலைத் திறந்தால், அந்த கணினியில் உள்ள தகவல்களைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருந்தது என்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளாா்.
ஈரான் மறுப்பு: டிரம்ப் தரப்பின் இந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்காவில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிடும் எந்த நோக்கமும் ஈரான் அரசுக்கு இல்லை. அமெரிக்காவில் எந்த ஒரு இணையவழி ஊடுருவல் முயற்சியையும் ஈரான் மேற்கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஒருவா் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டாா். அவா் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க முக்கிய அரசியல் தலைவா்களை கொலை செய்யும் நோக்கில் சதி செய்து வந்ததாக உறுதி செய்யப்பட்டது. அந்த நபா் ஈரானில் இருந்து உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டு வந்துள்ளாா் என்றும் விசாரணையில் தெரியவந்தது.