அமெரிக்காவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பங்கேற்ற ஜோ பைடனை ஆரவாரமாக வரவேற்ற மக்கள் பிரியாவிடையும் அளித்தனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரியாவிடை அளித்ததுடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகளை விமர்சித்தும் பேசியிருந்தார்.
மாநாட்டில் பைடன் கூறியதாவது ``டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை ஒரு தோல்வியுற்ற நாடு என்று அழைக்கிறார். அவர் தவறு செய்துவிட்டார். ஏனெனில், அமெரிக்காதான் அனைத்திலும் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. நாம் உலகின் முன்னணி நாடு என்று நினைக்காத ஒரு நாட்டின் பெயரைக் குறிப்பிடுங்கள்.
குறிப்பாக, நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை, தோல்வியுற்றவர்கள் என்று குறிப்பிட்டு, டிரம்ப் அவமரியாதை செய்ததாகக் கூறப்படுகிறது. தலைமைத் தளபதியாக இருக்க தகுதியற்றவர்தான் இவ்வாறு பேசுவர்.
இருப்பினும், புடினுக்கு டிரம்ப் தலைவணங்குகிறார். நான் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை; கமலா ஹாரிஸும் ஒருபோதும் செய்ய மாட்டார்.
மூன்று நாள்களில் கீவைக் கைப்பற்ற முடியும் என்று புடின் நினைத்தார்; ஆனால், மூன்று ஆண்டுகளாகியும், உக்ரைன் இன்னும் சுதந்திரமாகத்தான் உள்ளது.
அமெரிக்காவின் ஆன்மாவுக்கான போரில் நாங்கள் இருக்கிறோம். அமெரிக்காவின் முதல் பெண், கறுப்பின மற்றும் தெற்காசிய துணைத் தலைவரான கமலா ஹாரிஸ், தேர்தலில் டிரம்பைவிட முன்னிலை வகிக்கிறார்.
நீங்கள் சுதந்திரத்திற்கு வாக்களிக்கத் தயாரா? ஜனநாயகத்திற்கும் அமெரிக்காவிற்கும் வாக்களிக்க நீங்கள் தயாரா? நான்கு ஆண்டுகால ஆட்சியில் அசாதாரண முன்னேற்றம் அடைந்ததற்கு மக்களாகிய நீங்கள்தான் காரணம்’’ என்று தெரிவித்தார்.
மேலும், காஸாவில் நடந்து வரும் போர் நிலவரங்களையும் குறிப்பிட்ட பைடன், போர் நிறுத்தத்திற்காக, 24 மணிநேரமும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த கமலா ஹாரிஸ், ``நாங்கள் உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாட்டிற்கான உங்களின் தலைமையும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கதே’’ என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.