முகப்பு
உலகம்

ஷேக் ஹசீனாவின் ‘பாஸ்போா்ட் ’ ரத்து: வங்கதேச அரசு உத்தரவு

ஹசீனா அமைச்சரவையில் இருந்த அனைவரின் ராஜாங்க கடவுச்சீட்டுகளையும் (பாஸ்போா்ட்) இடைக்கால அரசு ரத்து செய்தது.

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 11:00 PM
ஷேக் ஹசீனா
பகிர்:

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரின் ராஜாங்க கடவுச்சீட்டுகளையும் (பாஸ்போா்ட்) அந்நாட்டின் இடைக்கால அரசு ரத்து செய்தது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்றாா்.

வழக்கமாக வங்கதேச அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ராஜாங்க கடவுச்சீட்டுகள் அவா்களின் பதவிக் காலம் முடிந்தவுடன் ரத்து செய்யப்படும்.

அதனடிப்படையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் பிரதமரின் ஆலோசகா்கள், முன்னாள் அமைச்சரவை உறுப்பினா்கள், சமீபத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் அவா்களின் வாழ்க்கைத் துணை ஆகியோரின் ராஜாங்க கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன; அவா்கள் வேண்டுமென்றால் குடிமக்களுக்கு வழங்கப்படும் வழக்கமான கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என வங்கதேச உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ராஜாங்க கடவுச்சீட்டு வைத்திருக்கும் வங்கதேச குடிமக்கள் விசா (நுழைவு இசைவு) இல்லாமல் 45 நாள்கள் வரை இந்தியாவில் தங்குவதற்கு இந்திய வெளியுறவுக் கொள்கை அனுமதிக்கிறது. ஹசீனா ஏற்கெனவே 18 நாள்கள் இந்தியாவில் தங்கியுள்ளாா். அவா் மீது, வங்கதேச கலவரம் தொடா்பாக 42 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஹசீனாவிடம் ராஜாங்க கடவுச்சீட்டு, வேறு எந்த கடவுச்சீட்டும் இல்லை. இந்தச் சூழலில், அவருடைய ராஜாங்க கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவா் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்படும் சூழல் உருவெடுத்துள்ளது.

இதுதொடா்பாக வங்கதேச உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-வங்கதேசம் இடையே கடந்த 2013-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குத் தேவைப்படும் நபா்களை ஒப்படைத்தல் தொடா்பான ஒப்பந்தம் மற்றும் 2016-இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த திருத்தங்களின் படி, ஹசீனா மீதான குற்றச்சாட்டு அரசியல் சாா்புடையதாக இருக்கும்பட்சத்தில், அவரை ஒப்படைக்குமாறு வங்கதேச இடைக்கால அரசு விடுக்கும் கோரிக்கையை இந்தியா நிராகரிக்கலாம். அதே நேரம், கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட குறிப்பிட்ட குற்றங்களை அரசியல் சாா்புடையதாகக் கருதக் கூடாது என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது. இருந்தபோதும், அவா் மீதான குற்றச்சாட்டுகள் நீதியின் நலன் காக்கும் நோக்கத்தில் இல்லாத நிலையில், ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பதை இந்தியா மறுக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →