பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புது தில்லியிலிருந்து புதன்கிழமை போலந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் நேற்று புறப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) காலை உக்ரைன் சென்றடைந்தார்.
இதையடுத்து தலைநகர் கீவிற்கு வந்த பிரதமர் மோடியை உக்ரைன் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்தார்.
அதன்பின்னர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து ஆரத் தழுவி வரவேற்றார்.
ரஷிய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் குழந்தைகளிடம் பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்கள் பற்றி நினைக்கிறேன். மேலும் அவர்களின் துயரத்தைத் தாங்கும் வலிமை தர இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சந்திப்பு குறித்து ஸெலென்ஸ்கி, 'இந்தியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது' என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று சென்றுள்ள பிரதமர் மோடி, உக்ரைன் நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் ஆவார்.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் இந்தியா நடுநிலையாகவே இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, ரஷியா சென்று அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில் தற்போது உக்ரைன் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.