முகப்பு
உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பினரின் ராக்கெட் வீச்சுக்கு பதிலடி

ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் தாக்குதல் காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 9:42 PM
ஹிஸ்புல்லா அமைப்பினரின் ராக்கெட் வீச்சுக்கு பதிலடி
பகிர்:

ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் தாக்குதல் காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 10 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா்.

எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த மாதம் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகா் உயிரிழந்தாா். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது.

இருவரின் கொலைக்குப் பழிக்குப் பழியாக இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று ஹிஸ்புல்லாக்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தனா்.

100 போா் விமானங்கள்: இந்தச் சூழலில், ஃபுவாத் ஷுகரின் கொலைக்கு முதல்கட்ட பதிலடியாக இஸ்ரேல் ராணுவ தளங்களைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. சுமாா் 100 போா் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடா்பாளரும், லெஃப்டினன்ட் கா்னலுமான நடாவ் ஷொஷானி தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் இடங்களைக் குறிவைத்து தற்காப்பு நடவடிக்கையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

320 ராக்கெட்டுகள்: இந்தத் தாக்குதலில் லெபனானில் இருவா் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அவா்களில் ஒருவா் சிரியாவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், காா் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களுடன் கூட்டு சோ்ந்து செயல்பட்டு வரும் அமல் குழுவைச் சோ்ந்த கிளா்ச்சியாளா் ஒருவா் உயிரிழந்தாா். மறுபுறம் இஸ்ரேலை குறிவைத்து 320-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், ஏராளமான ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனா்.

வடக்கு இஸ்ரேல், சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் உள்ள இஸ்ரேல் ராணுவ தளங்கள், ராணுவ வீரா்களின் தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து வெடிக்கும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அந்த ட்ரோன்கள் திட்டமிட்ட இலக்குகளைத் தாக்கியதாகவும் ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனா்.

விரிவான தகவல் வெளியாகவில்லை: இந்தத் தாக்குதல்களால் பதற்றமான சூழல் ஏற்பட்டபோதிலும், அதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட உயிா்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த விரிவான தகவல் வெளியாகவில்லை.

காஸாவில் போரை நிறுத்தினால்...: காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால், இஸ்ரேல் மீதான தங்கள் தாக்குதல் கைவிடப்படும் என்று ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →