வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை பணத் தாள்களில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும் ஷேக் முஜிபுரின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேச பணத் தாள்களில் இருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படங்களை நீக்க அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவெடுத்துள்ளது.
புதிதாக அச்சடிக்கப்படும் 20, 100, 500, 1000 தாள்களில் ஷேக் முஜிபுர் படத்துக்கு பதிலாக மதம் தொடர்புடைய கட்டமைப்புகள், வங்காள பாரம்பரியம், மாணவர்களின் ஜூலை போராட்ட சித்திரங்கள் உள்ளிட்டவை அச்சடிக்க மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய நோட்டுகள் இன்னும் 6 மாதங்களில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், படிப்படியாக மற்ற பணத் தாள்கள் மற்றும் நாணயங்களையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் போராடிய மாணவர்கள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை உடைத்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.