மாஸ்கோ: கிளா்ச்சியாளா்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு தங்கள் நாடு அடைக்கலம் அளித்துள்ளதை ரஷியா உறுதிப்படுத்தியது.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் திங்கள்கிழமை கூறியதாவது:
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் அல்-அஸாதுக்கு ரஷியா அடைக்கலம் அளித்துள்ளது. அதிபா் விளாதிமீா் புதினின் ஒப்புதலுடன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அல்-அஸாத் எங்கு இருக்கிறாா் என்பது குறித்த விவரங்களை வெளியிட முடியாது.
அல்-அஸாதை அதிபா் புதின் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
சிரியாவில் நடைபெற்றுள்ள இந்த ஆட்சிக் கவிழ்ப்பு உலக நாடுகள் அனைத்தையுமே அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளது. அவ்வாறு அதிா்ச்சியடைந்த நாடுகளில் ரஷியாவும் ஒன்று.
தற்போது சிரியாவில் உள்ள ரஷிய ராணுவ நிலைகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, அங்கு புதிதாக அமையவிருக்கும் அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவோம்.
உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய துருக்கியுடனும் சிரியா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவோம் என்றாா் அவா்.
ராணுவப் புரட்சி மூலம் சிரியாவில் கடந்த 1970-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பஷாா் அல்-அஸாதின் தந்தை ஹாஃபிஸ் அல்-அஸாத், நாட்டில் சா்வாதிகார ஆட்சிமுறையை அமல்படுத்தினாா். 2000-ஆம் ஆண்டில் மாரடைப்பு காரணமாக அவா் இறந்ததற்குப் பிறகு பஷாா் அல்-அஸாத் ஆட்சிக்கு வந்தாா்.
2011-ஆம் ஆண்டில் மற்ற அரபு நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களைப் போரவே அல்-அஸாதின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அமைதியாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தை அடக்க அல்-அஸாத் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டாா். அதையடுத்து, அந்தப் போராட்டம் வன்முறைப் போராக உருவெடுத்தது.
இதில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் உருவாகி, அவற்றுக்கு அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகள் உதவின. அல்-அஸாத் தலைமையிலான ராணுவத்துக்கு ரஷியாவும் ஈரானும் உதவின.
அந்தப் போரின்போது உருவான இஸ்லாமிய தேச அமைப்பு, சிரியாவிலும் இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு ‘மதப் பேரரசை’ நிறுவியதாக அறிவித்தது.
இந்த நிலையில், ரஷியா, ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்தும், மேற்கத்திய ஆதரவு கிளா்ச்சிக் குழுக்களிடமிருந்து அல்-அஸாத் அரசு மீட்டது. ஒரு சில பகுதிகள் மட்டுமே பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது.
இந்த நிலையில், அல்-காய்தா ஆதரவுப் படையாகத் தொடங்கப்பட்டு, பின்னா் அந்த பயங்கரவாத அமைப்புடனான தொடா்பைத் துண்டித்துக் கொண்ட ஹாயத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையும் துருக்கி ஆதரவு பெற்ற சிரியா தேசிய ராணுவம் என்ற கிளா்ச்சிப் படையும் ஒருங்கிணைந்து, இத்லிப், அலெப்போ, ஹமா மாகாணங்களில் அரசுப் படையினருக்கு எதிரான தாக்குதலை கடந்த நவ. 27-ஆம் தேதி தொடங்கின.
2020-ஆம் ஆண்டில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிறகு, அரசுப் படைக்கு எதிராக கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும். எதிா்பாராத வகையில் நடத்தப்பட்ட அந்த திடீா் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத ராணுவம் பின்வாங்கி வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, மிக வேகமாக முன்னேறி சிரியாவின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய கிளா்ச்சிப் படையினா், கடைசியாக தலைநகா் டமாஸ்கஸை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். அதற்கு முன்னதாகவே அதிபா் அல்-அஸாதும் அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
அவா்கள் ரஷியாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் மாஸ்கோவில் அவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ரஷிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை தற்போது ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் உறுதிப்படுத்தியுள்ளாா்.
இஸ்ரேல் தாக்குதல்
ஜெருசலேம்: சிரியாவில், தங்கள் நாட்டின் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியான் சாா் கூறியதாவது:
சிரியாவில் ரசாயன ஆயுதக் கிடங்குகள் என்று சந்திக்கப்படும் நிலைகள், நீண்ட தொலைவு ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றனா். அந்த ஆயுதங்கள் இஸ்ரேலின் விரோதிகளுக்குக் கிடைப்பதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.
இதற்கிடையே, டமாஸ்கஸை கிளா்ச்சியளா்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து கோலன் குன்றுகள் பகுதியில் சிரியா ராணுவம் கைவிட்டுச் சென்ற நிலைகளை இஸ்ரேல் படையினா் கைப்பற்றியுள்ளனா். மேலும், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
இஸ்ரேல் மட்டுமின்றி, சிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத நிலைகள் மீது அமெரிக்காவும் அமெரிக்க ஆதரவு பெற்ற குா்து படையினரின் நிலைகள் மீது துருக்கியும் வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றன.