முகப்பு
உலகம்

சிரியாவைவிட்டு வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தாய்நாட்டுக்குச் செல்ல ஆயத்தம்!

தாய்நாட்டுக்கு திரும்பும் சிரியா அகதிகள்!

Updated On : 10 டிசம்பர், 2024 at 7:56 AM
துருக்கி - சிரியா எல்லையான சில்வேகோஸு கேட் பகுதியில் திரண்டிருக்கும் சிரிய அகதிகள்
பகிர்:

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியாவிலிருந்து வெளியேறி, அகதிகளாக உலகின் பல நாடுகளிலும் தஞ்சமடைந்திருந்த லட்சக்கணக்கான சிரிய மக்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர்.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் மூண்டதிலிருந்து அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி சுமார் 130 நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா. அகதிகள் முகமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக துருக்கி, லெபனான், ஜோர்டான், இராக், எகிப்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் சிரிய மக்கள் 10 லட்சத்துகும் மேல்.

இந்த நிலையில், சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. சிரியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் அல்-அஸாதுக்கு ரஷியா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் அண்டை நாடான துருக்கியில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சிரிய மக்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் உள்ளிட்ட பல நகரங்களில் வீதிகளில் திரண்டு சிரிய அகதிகள் கொண்டாடி மகிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. அதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை சிரியா தூதரகத்திலிருந்த சிரிய அரசின் கொடியை அகற்றிவிட்டு கிளர்ச்சிப் படையின் கொடியை ஏற்றியுள்ளனர்.

துருக்கியில் தஞ்சமடைந்திருந்த சிரிய மக்கள் இப்போது குடும்பம்குடும்பமாக துருக்கி - சிரியா எல்லைக்கு படையெடுத்து வருவதை காண முடிகிறது. துருக்கி - சிரியா எல்லையில் அமைந்துள்ள சில்வேகோஸு, ஆன்குபினார் வாயில்களில் அவர்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

இதனிடையே, சிரிய அரசின் ஆயுதங்கள் கிளர்ச்சிப்படையினர் வசம் சென்றுவிடாமலிருக்க அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி ஆகிய நாடுகள் சிரியாவின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. தற்போதைய அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பயங்கரவாதக் குழுக்கள் சிரியாவில் ஆக்கிரமிக்காமலிருக்க மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், அமெரிக்க மத்திய கமாண்ட்(செண்ட்காம்) சிரியாவில் 75-க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறிவைத்து தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்கள் இருப்பிடங்கள், முகாம்கள் அடக்கம். சிரியாவில் வேதியியல் ஆயுதங்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் அழித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் அங்குள்ள 900 அமெரிக்க ராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →