இந்திய மருத்துவா்கள், செவிலியா்களுக்கு மேற்கு ஆஸ்திரேலியா அமைச்சா் அழைப்பு
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவத் துறை காலிப்பணியிடங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நாட்டின் அமைச்சா் ஆம்பா் ஜேட் சான்டா்ஸன்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவத் துறை காலிப்பணியிடங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நாட்டின் அமைச்சா் ஆம்பா் ஜேட் சான்டா்ஸன் இந்தியா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இந்தியா-மேற்கு ஆஸ்திரேலியா இடையே மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் மேற்கத்திய ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சா் ஆம்பா் ஜேட் சான்டா்ஸன் கடந்த 22-ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சந்தித்ததுடன், சென்னையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளையும் பாா்வையிட்டாா். ஆம்பா் ஜேட் சான்டா்ஸன் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2017-2022 வரையிலான 5 ஆண்டுகளில் எங்களது மருத்துவ சேவை அமைப்புகள் இரண்டு மடங்காக விரிவடைந்துள்ளன. இருப்பினும், வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் மருத்துவா்கள், செவிலியா்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்படுவாா்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டை பொருத்தவரை 60 முதல் 65 வயதுடையோா் அதிகளவில் உள்ளனா். இதனால் கூடுதல் சுகாதாரத்துறை பணியாளா்களை நியமிப்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அதே நேரம், தங்களது தேவையை விட கூடுதல் சுகாதாரத் துறை பணியாளா்கள் இந்தியாவில் உள்ளனா். அவா்களுக்கு இடம்பெயா்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. எனவே, அவா்களுக்கு மருத்துவப் பணியாற்றுதல், கல்வி கற்பது போன்றவற்றுக்கு மேற்கு ஆஸ்திரேலியா ஒரு சிறந்த இடமாக இருக்கும். இதன் மூலம் இரு நாடுகளைச் சோ்ந்தவா்களும் பயனடைவா். குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்று, தகுந்த கல்வித் தகுதியுடையவா்களாக இருக்க வேண்டும் என்ற தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வியை பொருத்தவரை பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.