இஸ்ரேல் மீது பாய்ந்த 60 ஏவுகணைகள்!
ஹமாஸ் இரண்டாம் நிலைத் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரைக் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகளை ஹெஸ்புல்லா அமைப்பு சனிக்கிழமை காலை ஏவியுள்ளது.
'சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக பதிலடி கொடுக்கவுள்ளோம். அதில் முதன்மைத் தாக்குதலாக இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறிவைத்து 62 பலவகைப்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளோம்' என ஹமாஸின் ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்புல்லா தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா 'விரைவில் இதற்கான பதிலடி கொடுக்கப்படும்' என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிக்க: ஈரான் இரட்டை வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை உயர்வு!
ஹெஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு பெய்ருட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரூரி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் இதற்கு பொறுப்பேற்று அறிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் தொடங்கியிருக்கும் இந்தப் போரில் இஸ்ரேல் லெபனான் எல்லையில் அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்றபடி உள்ளன. அது பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு இடையேயான சண்டையாக இருக்கிறது.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தொடரும் இந்தத் தாக்குதல்களில் லெபனானில் 129 ஹெஸ்புல்லா போராளிகள் உள்பட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் இதுவரை ஒன்பது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் இறந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.