இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தன் காலமானார்
இரா. சம்பந்தன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் காலமானார்.
இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (வயது 91) உடல்நலக் குறைவால் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இரா. சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன் என்றும் சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் தனது இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.