மாற்றம் இப்போது தொடங்குகிறது என்று பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டு புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் தேர்தல் கணிப்புகளில் சொல்லப்பட்டது போன்றே 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது தொழிலாளர் கட்சி. இதன் மூலம், பிரிட்டனில் தொடர்ந்து 14 ஆண்டு காலம் நடைபெற்று வந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
லண்டனில், வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட பேரணியில் கலந்துகொண்டு பேசிய கியெர் ஸ்டார்மர், மாற்றம் இப்போது தொடங்குகிறது, தேசத்தை புதுப்பிக்கும் நேரம் இது, இப்படி ஒரு பதவியில் அமர்வது, பல்வேறு பொறுப்புகளை வழங்குகிறது என்றார்.
இந்த நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் கொள்கைகளை புதுப்பிப்பதை விட எங்களுக்குப் பெரிய பொறுப்பு எதுவும் இல்லை, நாம் இதுவரை மேற்கொண்டுவந்த அரசியலை இனி, பொது சேவைக்கு திருப்ப வேண்டும், அரசியல் எப்போதுமே நன்மைக்கான சக்திதான் என்பதைக் காட்ட வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசியலுக்கு அதுவே பெரிய சோதனையாக இருக்கும். நம்பிக்கைக்கான போராட்டம் என்பது நமது சகாப்தத்தை வரையறுக்கும் போர் என்றார்.
பிரிட்டன் மக்கள் ஒன்று சேர்ந்து மிக ஆழமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறீர்கள், மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு அது பணியில் எதிரொலிக்க முயல்வேன் என்றார்.
மேலும், நாட்டு மக்கள், தொழிலாளர் கட்சி மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்து ஆட்சியமைப்பதை உறுதி செய்திருப்பதற்கு தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாக கியெர் ஸ்டார்மர் சமூக வலைத்தளம் மூலமாகவும் நேரடியாக மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையின் மொத்தமுள்ள 650 இடங்களில் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியோ 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி அடைந்த தோல்விக்கு தானே முழுப் பொறுப்பேற்பதாக சுனக் கூறியிருக்கிறார்.
பிரதமர் ரிஷி சுனக் தலைமையில், வரலாறு காணாத அளவுக்கு, பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. சுமார் 14 ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்து வந்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையில் பிரட்டன் பிரதமராக 20 மாதங்களுக்கு முன்பு, மிகப்பெரிய எழுச்சியின் காரணமாக ரிஷி சுனக் பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை, டௌனிங் சாலையில் அமைந்திருக்கும் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றவிருக்கும் பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக், அதன் பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றிவிட்டு, அவர் பிரிட்டன் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளிப்பார் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.