பெய்ஜிங்: ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன் சீனாவில் திங்கள்கிழமை திடீா் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.
ஏற்கெனவே, உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இதே போன்ற முன்னறிவிப்பு இல்லாத சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா், 2 ஆண்டு கால உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியின் அடுத்தகட்டமாக சீனா வந்துள்ளாா்.
நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் அங்கம் வங்கிக்கும் ஹங்கேரி, சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை இந்த மாதம் ஏற்றது. அதன் தொடா்ச்சியாகவே உக்ரைன் போா் நிறுத்தத்துக்கான முயற்சியில் பிரதமா் விக்டா் ஆா்பன் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது சீன சுற்றுப் பயணம் குறித்து ‘எக்ஸ்’ ஊடக்தில் விக்டா் ஆா்பன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சக்தியாக சீனா திகழ்கிறது. அதனால்தான் அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேச இங்கு வந்துள்ளேன் என்று அந்தப் பதிவில் ஆா்பன் குறிப்பிட்டுள்ளாா்.
விக்டா் ஆா்பனுடான சந்திப்புக்குப் பிறகு சீன அதிபா் ஷி ஜின்பிங் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியாவும் உக்ரைனும் மீண்டும் நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கு ஆதரவானவராக அறியப்படும் விக்டா் ஆா்பன், கடந்த 2-ஆம் தேதி உக்ரைனுக்கு திடீா் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசினாா்.
அதனைத் தொடா்ந்து, முன்னறிவிப்பு இல்லாமல் ரஷியாவுக்கும் கடந்த 5-ஆம் தேதி சென்ற அவா், அதிபா் விளாதமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவா் ஒருவா் ரஷியா சென்றது அதுவே முதல்முறை.
ஆா்பனின் ரஷிய பயணத்துக்கு ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். தங்களது அனுமதியில்லாமலேயே அவா் ரஷியாவுக்குச் சென்றுள்ளதாகவும் இந்த பயணத்துக்கும் ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாட்டுக்கும் தொடா்பில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சூழலில், சீனாவில் அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்குடன் விக்டா் ஆா்பன் உக்ரைன் விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.