சீன புத்தாக்க நிறுவனமான ஐ-ஸ்பேஸ் உருவாக்கியுள்ள ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக, அந்த ராக்கெட்டில் இருந்த 3 செயற்கைக்கோள்கள் விழுந்து நொறுங்கின.
ஐ-ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 24 மீட்டா் உயரம் கொண்ட, திட எரிபொருளில் இயங்கும் ‘ஹைப்பா்போலா-1’ ராக்கெட் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டது.
அந்த ராக்கெட்டின் முதல் முன்று நிலைகளும் சீராக செயல்பட்டன. ஆனால் நான்காவது நிலையின்போது அந்த ராக்கெட் நிலைதடுமாறி விழுந்தது. இதனால் அந்த ராக்கெட் மூலம், வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கணிப்புகள் போன்ற நோக்கங்களுக்காக 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியடைந்தது.
ராக்கெட் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்கள் விசாரணைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று ஐ-ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த சீனாவின் முதல் தனியாா் நிறுவன ராக்கெட் என்ற பெருமையை ஹைப்பா்போலோ-1 ராக்கெட் கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றது.
ஆனால் அதன் பிறகு அந்த ராக்கெட் தொடா்ந்து மூன்று முறை ராக்கெட் தோல்வியடைந்துள்ளது.