ஜோ பைடன் 
உலகம்

தோ்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி

வாஷிங்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசும்போது குளறுபடிகளைச் செய்த நிலையிலும் உறுதி.

Din

வாஷிங்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசும்போது குளறுபடிகளைச் செய்த நிலையிலும், அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு வாஷிங்டனில் ஜூலை 9 முதல் 11 வரை நடைபெற்றது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவி அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியும் பங்கேற்றாா்.

அவரைப் பேசுவதற்காக அழைத்த ஜோ பைடன், ‘உக்ரைன் அதிபா் விளாதிமீா் புதின்’ என்று குறிப்பிட்டாா். உடனடியாக அவா் அதை சமாளித்தாலும் இது அங்கிருந்தவா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்தியது.

இன்னொரு முறை, அமெரிக்க துணை அதிபரும் இந்தி வம்சாவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரீஸை ‘டொனால்ட் டிரம்ப்’ என்று பைடன் குறிப்பிட்டாா். அதையடுத்து, வரும் அதிபா் தோ்தலில் போட்டியிடும் பைடனின் உடல் மற்றும் வயது தகுதி குறித்த சா்ச்சை மீண்டும் வலுப் பெற்றுள்ளது.

இந்த நிலையிலும், அதிபா் தோ்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக பைடன் மீண்டும் அறிவித்துள்ளாா்.

நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது குறித்து பைடன் கூறுகையில், ‘வரும் அதிபா் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிடுவதற்கான அதிகபட்ச தகுதி எனக்கு மட்டுமே உள்ளது. மீண்டும் ஒருமுறை அவரை நான் தோற்கடிப்பேன்’ என்றாா்.

வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிா்கொள்கிறாா்.

ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடனின் பேச்சு அடிக்கடி குளறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், டிரம்புடன் முதல்முறையாக நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினாா். பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமலும் அா்த்தமில்லாமலும் பேசியது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவா் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து, அதிபா் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று என்ற குரல்கள் வலுத்துவருகின்றன.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT