தடுமாற்றம்.. துணை அதிபர் டிரம்ப், ஸெலன்ஸ்கியை புடின் என தவறான உச்சரித்த ஜோ பைடன்!
உக்ரைன் அதிபர் புடின் என்றும் துணை அதிபர் டிரம்ப் என்றும் ஜோ பைடன் தவறாக உச்சரித்தது பேசுபொருளாகியிருக்கிறது.
ஒருபக்கம் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தலைவர்களின் பெயர்களை தவறாகச் சொல்லி மேலும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) தொடங்கி வியாழக்கிழமை (ஜூலை 11) நிறைவடைந்த நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயருக்கு பதிலாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். அடுத்து நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், உக்ரைன் அதிபர் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக, ரஷ்ய அதிபர் புதின் பெயரை உச்சரித்து பிறகு தனது தவறை உணர்ந்து சரியாகக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தின் போதே, ஜோ பைடனின் தடுமாற்றம் பேசுபொருளாகியிருந்தது. அப்போதிலிருந்தே, அவர் அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
Advertisement
அதாவது, பைடன் சரியாக கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் தலைவர்களின் பெயர்களை மாற்றி உச்சரித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
81 வயதாகும் ஜோ பைடன் அதிபா் தோ்தல் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு பெற்று, தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை எதிா்கொண்டுள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, துணை அதிபர் டிரம்ப் என்று கூறிவிட்டார். செய்தியாளர்கள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, தான் தவறாக உச்சரித்ததைப் புரிந்துகொண்டு, பிறகு அவரே துணை அதிபர் கமலா ஹாரிஸ் என திருத்தியிருந்தார்.
அதன்பிறகு, நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உக்ரைன் அதிபரை அறிமுகம் செய்து அடுத்து அவர் பேசுவார் என்று அவரிடம் மைக்கை வழங்கும் முன்பு, அதிபர் புதின் என்று கூறிவிட்டு, அடுத்த வினாடியே, தவறாக உச்சரித்துவிட்டதாகக் கூறி திருத்தம் செய்திருந்தார் ஜோ பைடன்.
உக்ரைன்- ரஷிய போர் நடைபெற்று வரும் சூழலில் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமைதொடங்கிய நேட்டோ மாநாடு, வியாழக்கிழமை நிறைவடைந்தது.
நேட்டோ மாநாட்டில் உக்ரைனுக்கு கூடுதல் வான்பாதுகாப்பு தளவாடங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதாக உறுப்பு நாடுகள் உறுதியளித்தன.
இந்த நிலையில், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை ரஷியாவுக்கு சீனா அனுப்புவதாகக் குற்றஞ்சாட்டிவரும் நேட்டோ நாடுகள், அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டே போா் தொடா்ந்து நடைபெறுவதற்கான செயல் ஊக்கியாக சீனா திகழ்வதாக மாநாட்டில் குறிப்பிட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.