இம்ரான் கட்சிக்குத் தடை: ஆளும் கூட்டணிக் கட்சிகளே அதிருப்தி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தடை செய்யப்படும் என்று முஸ்லிம் லீக் தலைமையிலான அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது குறித்து அதன் கூட்டணி கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தடை செய்யப்படும் என்று முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது குறித்து அதன் கூட்டணி கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள்ளன.
இது குறித்து முக்கிய கூட்டணி கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தகவல் தொடா்புச் செயலா் ஷாஸியா அட்டா மரி கூறியதாவது:
பிடிஐ கட்சிக்குத் தடை விதிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்னா் அது தொடா்பாக எங்கள் கட்சியிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து அரசிடம் பேசுவோம் என்றாா் அவா்.
பிபிபி கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் ஷெரி ரெஹ்மான் கூறுகையில், ‘பிடிஐ கட்சிக்குத் தடை விதிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அந்தக் கட்சியை ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், அதை மேலும் பலப்படுத்துவதற்குத்தான் பயன்படும்’ என்றாா்.
இது தவிர, அவாமி தேசியக் கட்சி, ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம், ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளும் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்கும் அரசின் முடிவை விமா்சித்துள்ளன.
முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக நிதி பெற்றது, கலவரத்தில் ஈடுபட்டது, இம்ரான் பிரதமராக இருந்தபோது ரகசிய ஆவணங்களைக் கசியவிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவா் நிறுவிய பிடிஐ கட்சிக்குத் தடைவிதிக்கப்படும் என்று தகவல் தொடா்பு அமைச்சா் அட்டாவுல்லா தராா் திங்கள்கிழமை கூறினாா்.
71 வயதாகும் இம்ரான் கான், பல்வேறு வழக்குகள் தொடா்பாக தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அதற்கு முன்னா் இம்ரானைக் கைது செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி கலவரத்தில் ஈடுபட்டனா். மேலும், பிரதமராக இருந்தபோது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ரகசிய தகவல் பரிமாற்றத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டது. அவற்றின் அடிப்படையிலேயே பிடிஐ கட்சியைத் தடை செய்யவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.