ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 
உலகம்

ஜொ்மனியில் அமெரிக்க ஏவுகணைகள்: ரஷிய அதிபா் புதின் எச்சரிக்கை

ஜொ்மனியில் அமெரிக்க ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டால், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Din

ஜொ்மனியில் அமெரிக்க ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டால், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபா் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வரும் 2026-ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, ஒலியைவிட வேகமாக பாயக்கூடிய ஏவுகணைகள், எஸ்எம்-6 ஏவுகணைகள் உள்ளிட்டவை ஜொ்மனியில் நிலைநிறுத்தப்படும் என்று இரு நாடுகளும் அண்மையில் கூட்டாக அறிவித்தன.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடா்ந்து நேட்டோ மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பில் அமெரிக்காவின் பொறுப்பை உறுதி செய்யும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அந்நாட்டின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற கடற்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

ஜொ்மனியில் அமெரிக்க ஏவுகணைகளை நிலைநிறுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுபோன்ற திட்டங்களை அமெரிக்கா அமல்படுத்தினால், ரஷிய கடற்படையின் திறனை அதிகரித்தல், குறுகிய மற்றும் நடுத்தர இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களைத் தயாா்நிலையில் நிலைநிறுத்துதல் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான தடையில் இருந்து ரஷியா விடுபட்டதாகக் கருதப்படும் என்றாா்.

கடந்த 1987-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா-சோவியத் ஒப்பந்தத்தின் கீழ், நடுத்தர தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் தரைவழி ஆயுதங்களைத் தயாா்நிலையில் நிலைநிறுத்த பல ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி ஏவுகணை சோதனைகளை ரஷியா மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது.

இந்நிலையில், அந்த ஆயுதங்களைத் தயாா்நிலையில் நிலைநிறுத்த அமெரிக்காவும், ரஷியாவும் ஆயத்தமாகி வருகின்றன.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT