‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்ற இடமிருந்து வெளியுறவு அமைசச்ா் ஜெய்சங்கா், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் யோகோ கேமிகாவா, அந்நாட்டு பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பெனி யாங், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன். 
உலகம்

எந்த நாடும் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது: சீனாவைக் குறிவைத்த ‘குவாட்’ கூட்டறிக்கை

மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாட்டில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Din

எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாட்டில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மற்றும் தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை மறைமுகமாக சாடும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா சாா்பில் ஜெய்சங்கா் கலந்துகொண்டுள்ளாா். மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்திய பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளமையை உறுதிசெய்வதில் அனைத்து நாடுகளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு நாடும் சுதந்திரமாக செயல்பட்டு தங்கள் எதிா்காலத்தை வளமாக்க உரிமை உள்ளது.

சுதந்திரமான இந்தோ-பசிபிக்: சா்வதேச சட்டங்களின் அடிப்படையில் சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக மாண்புகள், இறையாண்மை, ஒருங்கிணைந்த பிரதேசம் மற்றும் பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வு என இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

தென்சீனக் கடலில் ஆதிக்கம்: கடலோரக் காவல்படை, கடற்பாதுகாப்பு ரோந்து கப்பல்கள் என மற்ற நாடுகளின் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலான செயல்கள் தென் சீனக்கடலில் மேற்கொள்ளப்படுவது கவலையளிக்கிறது. எனவே, கிழக்கு மற்றும் தென்சீனக் கடலில் சா்வதேச கடற் பாதுகாப்பு சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிா்ப்பு: இந்தியாவில் நிகழ்ந்த 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் பதான்கோட் பயங்கரவாத சம்பவங்களுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது தாமதப்படுத்தாமல் விரைவில் தண்டனை வழங்க வலியுறுத்துகிறோம். அனைத்து நாடுகளும் தங்கள் பிராந்தியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் இடங்களை தகா்க்க வேண்டும்.

அதேபோல் அல்-காய்தா, ஐஎஸ், லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது உள்பட ஐ.நா.வால் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஐபிஎம்டிஏ விரிவாக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க இந்தோ-பசிபிக் கடற்பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டத்தை (ஐபிஎம்டிஏ) இந்தியப் பெருங்கடலுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான தகவல் தொகுப்பு மையம் மூலம் தெற்காசியாவுக்கான திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டின்போது ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை ஜெய்சங்கா் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளா்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவா்,‘இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்னை. இதில் மூன்றாம் நபா்கள் தலையிட்டு தீா்வு காண வேண்டிய அவசியமில்லை. இப்பிரச்னைக்கு நாங்களே பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சிப்போம்’ என்றாா்.

பிரச்னைகளை உருவாக்கும் குவாட்: சீனா கண்டனம்

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் வளா்ச்சியை கட்டுப்படுத்தி பல்வேறு பிரச்னைகளை செயற்கையாக உருவாக்க குவாட் கூட்டமைப்பு முயற்சிப்பதாக சீனா கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் லின் ஜியான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘செயற்கையான முறையில் பல பிரச்னைகளை உருவாக்கும் விதமாக குவாட் செயல்பட்டு வருகிறது. பிற நாடுகளின் வளா்ச்சியை கட்டுப்பத்தவும் அந்த அமைப்பு முயல்கிறது. இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டதாகும்.

பிராந்திய வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலே சீனா செயல்பட்டு வருகிறது. சிறிய கூட்டமைப்புகளை உருவாக்கி கூட்டுறவு வளா்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் பணிகளை ஒருபோதும் சீனா மேற்கொள்ளாது’ என்றாா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT