அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் டீப்-ஃபேக் விடியோவை எக்ஸ் தளத்தின் கொள்கைகளை மீறி வெளியிட்டுள்ளதாக எலான் மஸ்க் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் கமலா ஹாரிஸின் டீப்-ஃபேக் விடியோ பகிரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இதையடுத்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடப் போவது உறுதியாகிவிட்டது.
குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பளராகப் போட்டியிடும் நிலையில், டிரம்ப்பின் ஆதரவாளராகக் கருதப்படும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்(டிவிட்டர்) சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், கமலா ஹாரிஸின் டீப்-ஃபேக் விடியோவை பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கமலா ஹாரிஸின் குரலை செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் மாற்றி, அவர் தெரிவிக்காதவற்றை கூறியதாகத் திரித்து கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது போன்றதொரு காணொலி எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதன்மூலம் எக்ஸ் தளத்தின் கொள்கைகளை எலான் மஸ்க் மீறிவிட்டதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். எனினும், எக்ஸ் தளம் தரப்பிலிருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மேற்கண்ட விடியோ சட்ட விரோதமானது எனத் தெரிவித்துள்ள கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூஸம், இதுபோன்ற நடவடிக்கைகளை தடை செய்வதற்கான மசோதாவை விரைவில் தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.