டாக்கா, ஜூலை 31: இட ஒதுக்கீட்டு சீா்திருத்தங்களை வலியுறுத்தி வங்கதேசத்தில் இந்த மாதம் நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணையில் ஐ.நா.வும் பிற சா்வதேச அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:
போராட்ட வன்முறை குறித்த விசாரணை சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக, ஐ.நா. மற்றும் பிற சா்வதேச அமைப்புகள் இந்த விசாரணையில் பங்கேற்கவேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்துகொள்ளவில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் சா்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றாா் அவா்.
1971-இல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மாணவா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அந்தப் போராட்டத்தை எதிா்த்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கினா்.
பின்னா் சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 5 சதவீதமாக குறைத்ததைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்குவந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 150 போ் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.