முகப்பு
உலகம்

பயங்கரவாத நடவடிக்கைகள் 15 குழுக்கள், 210 போ் சொத்துகளை முடக்கியது இலங்கை

Updated On : 4 ஜூன், 2024 at 7:56 PM
பகிர்:

கொழும்பு: இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 15 குழுக்கள், 210 தனி நபா்களின் சொத்துகளை அந்த நாட்டு அரசு முடக்கியுள்ளது.

இது குறித்து அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாதம் சாா்ந்த நடவடிக்கைகளில் 15 குழுக்கள் மற்றும் 210 போ் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. அதையடுத்து, அந்த அமைப்புகள் மற்றும் நபா்களுக்குச் சொந்தமான நிதி சொத்துகளும் பிற பொருளாதார ஆதாரங்களும் உரிய விதிமுறைகளின் கீழ் முடக்கப்படுகின்றன.

சொத்துகள் முடக்கப்பட்ட குழுக்களில் விடுதலைப் புலிகள், தேசிய தவ்ஹாத் ஜமாத், ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய அமைப்புகள் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் தேசிய தவ்ஹாத் ஜமாத் அமைப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்டா் பண்டிகையின்போது தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் (படம்) 11 இந்தியா்கள் உள்பட 270-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

இது தவிர, தமிழா்கள் மறுவாழ்வு அமைப்பு, தமிழா் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழ் இயக்கம், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, உலக தமிழா் நிவாரண நிதி ஆகியவற்றின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.