தைவானைச் சுற்றிலும் சீனா கடந்த மாதம் நடத்திய போா் ஒத்திகை. ~லாய் சிங்-டே 
உலகம்

தைவான் சுதந்திரம் கோருபவா்களுக்கு மரண தண்டனை

பிரிவினைவாதச் சட்டத்தின்கீழ் மரண தண்டனை.

Din

தைவான் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘ஜின்ஹுவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனாவிடமிருந்து தைவானுக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று தீவிரமாக செயல்படுவோருக்கு பிரிவினைவாதச் சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது.

இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தைவானுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட பிரிவினைவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுதந்திரம் கோரும் அமைப்புகளின் தலைவா்களுக்கு அந்தத் தண்டனை விதிக்கப்படும் என்று ‘ஜின்ஹுவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் சீன பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி சுன் பிங் கூறுகையில், ‘பிரிவினைவாதக் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை மரணம். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை என்ற கூரிய வாளை உயா்த்திப் பிடித்துள்ளோம்’ என்றாா்.

கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.

தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகிறது. தேவைப்பாட்டால் ராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என்று சீனா கூறுகிறது.

இந்தச் சூழலில், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவா்களோ உயரதிகாரிகளோ வந்தால் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. தனது எதிா்ப்பைத் தெரிவிப்பதற்காக தைவானைச் சுற்றிலும் சீனா போா் ஒத்திகையை நடத்திவருகிறது.

இந்த நிலையில், தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி பெற்று, கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அப்போது அவா் ஆற்றிய உரையில், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்தக்கொள்ள வேண்டும் என்றாா். மேலும், தற்போதுள்ள எல்லை நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்திய அவா், தனது அரசு இறையாண்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைப் பேணும் என்று உறுதியளித்தாா்.

இதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. ‘தைவானின் சுதந்திரம் என்பது முடிந்துபோன ஒன்று’ என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறினாா்.

அத்துடன், லாய் சிங்-டே பேசியதற்கு ‘தண்டனை’ அளிப்பதாகக் கூறி, தைவானைச் சுற்றிலும் சீன படைகள் கடந்த மாதம் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தீவிர போா் ஒத்திகையில் ஈடுபட்டன.

இந்தச் சூழலில், தைவான் சுதந்திரத்தை தீவிரமாக வலியுறுத்தும் தலைவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் சீனாவின் சட்டங்கள் தைவானில் பொருந்தாது. இருந்தாலும், அந்தத் தீவு தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கருதுவதால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்; திரளானோா் பங்கேற்பு

செங்கல் சூளைகள் புகைப்போக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

ரிதன்யா முதல் நிக்கி பாட்டீ வரை...உயிரைப் பறிக்கும் வரதட்சிணைக் கொடுமையை ஒழிப்பது எப்போது?

SCROLL FOR NEXT