ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் உள்ள வில்னியான்ஸ்க் என்ற இடத்தில் பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா். டொனட்ஸ்க் பகுதியில் ரஷியாவின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா போா் தொடுத்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போா் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ரஷியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில், உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ்க் என்ற இடம் பலத்த சேதமடைந்தது.
இந்தத் தாக்குதலில் 3 சிறாா்கள் உள்பட பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா். 36 போ் காயமடைந்தனா் என்று உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ஸபோரிஷியா ஆளுநா் இவான் ஃபெதோரோவ் டெலிகிராமில் வெளியிட்ட பதிவில், ரஷிய தாக்குதலில் வில்னியான்ஸ்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஒன்று உள்ளிட்டவை சேதமடைந்ததாகத் தெரிவித்தாா்.
டொனட்ஸ்கில் நாள்தோறும் தாக்குதல்: உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் ரஷியாவின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா் என்று அந்தப் பகுதி ஆளுநா் வடிம் ஃபிலாஷ்கின் தெரிவித்தாா். அந்தப் பகுதியில் ரஷியாவின் எறிகணைத் தாக்குதல் நாள்தோறும் நீடிப்பதாகவும் அவா் கூறினாா்.
இதேபோல ரஷியாவின் எறிகணைத் தாக்குதலில் தெற்கு கா்சான், காா்கிவ் பகுதிகளிலும் பலா் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தென்மேற்கு ரஷியாவில் உள்ள 6 பிராந்தியங்களில் உக்ரைனின் 30-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) சனிக்கிழமை நள்ளிரவு சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.