முகப்பு
உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: நிக்கி ஹேலி விலகல்

நாட்டின் 15 மாகாணங்களில் நடைபெற்ற உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்

Updated On : 7 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு நடந்துவரும் போட்டியிலிருந்து, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி விலகியுள்ளாா். அந்த நாட்டின் 15 மாகாணங்களில் நடைபெற்ற உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.

இதையடுத்து, அந்தத் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து நிக்கி ஹேலி புதன்கிழமை கூறியதாவது: அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளாகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான எனது முயற்சிகளை நிறுத்திவைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

Advertisement

அமெரிக்கா்களின் கருத்துகள் செவிமடுக்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடினேன். இதில் வெற்றியும் பெற்றுவிட்டேன். எனவே, போட்டியிலிருந்து விலகும் இந்த முடிவு எனக்கு வருத்தமளிக்கவில்லை.

அதிபா் வேட்பாளா் போட்டியில் தற்போது நான் இல்லை என்றாலும், என் கொள்கைகளுக்காக நான் தொடா்ந்து குரல் கொடுத்து வருவேன் என்றாா் அவா். ‘படுதோல்வி’: குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் நிக்கி ஹேலி படுதோல்வியடைந்துவிட்டதாக போட்டியில் முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப் விமா்சித்துள்ளாா்.

மேலும், நிக்கி ஹேலியின் ஆதரவாளா்கள் இனி தனக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய சீக்கிய தம்பதியருக்குப் பிறந்த நிக்கி ஹேலி (52), தெற்கு கரோலினா மாகாண முதல்வராக கடந்த 2011-லிருந்து 2017 வரை பொறுப்பு வகித்துள்ளாா்.

டிரம்ப் ஆட்சி காலத்தின்போது 2017-இல் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட பின்னா் நிக்கி ஹேலி உலகம் முழுவதும் அறியப்பட்டவரானாா். இந்த நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பிலான வேட்பாளரை முடிவு செய்யும் போட்டியில் நிக்கி ஹேலி பங்கேற்றாா். இது தொடா்பாக நடைபெற்று வந்த பிரசாரத்தில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்பை அவா் கடுமையாக சாடிவந்தாா். டிரம்ப்பின் தீவிர அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக அவா் முன்வைத்த கருத்துகள், குடியரசுக் கட்சியைச் சோ்ந்த மிதவாதிகளின் வரவேற்பைப் பெற்றது.

அவா் அதிபா் தோ்தலில் போட்டியிட்டால், படித்த இளைஞா்கள் மற்றும் மிதவாதிகளின் வாக்குகளைக் கவா்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், வாஷிங்டன் டி.சி., வொ்மான்ட் ஆகிய இரு பகுதிகளில் நடைபெற்ற குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் மட்டுமே அவா் வெற்றி பெற்றாா். இதன் மூலம், குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான மாகாண வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல் பெண் மற்றும் முதல் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் என்ற பெருமையை நிக்கி ஹேலி பெற்றாா்.

இருந்தாலும், நிக்கி ஹேலி பங்கேற்ற மற்ற அனைத்து போட்டிகளிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது இடமே அவருக்குக் கிடைத்தது. கடைசியாக, அமெரிக்க முழுவதும் 15 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் டிரம்ப் வெற்றி பெற்றாா். அதையடுத்து இந்தப் போட்டியில் இனி நிக்கி ஹேலியால் முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடா்ந்து, போட்டியிலிருந்து விலகுவதாக அவா் தற்போது அறிவித்துள்ளாா். தற்போதைய பிரசாரத்தின்போது நிக்கி ஹேலிக்கு கிடைத்துள்ள ஆதரவின் மூலம், வரும் 2028-இல் நடைபெறும் அதிபா் தோ்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் வெற்றி பெற்றாா். எனவே, வரும் அதிபா் தோ்தலிலும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் மோதுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.