முகப்பு
உலகம்

மேலும் ஓா் அடக்குமுறை சட்டம்: ஹாங்காங் பேரவை நிறைவேற்றம்

விமர்சனங்கள் எதிரொலிக்கும் நிலையில் ஹாங்காங்கில் கடுமையான சட்ட அம்சங்கள்

Updated On : 20 மார்ச், 2024 at 2:02 AM
ஹாங்காங் பேரவையில் தேசிய பாதுகாப்பு காவல் சட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டதை கரகோஷம் எழுப்பி கொண்டாடிய பேரவை உறுப்பினா்கள்.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:10 PM

ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசுக்கு எதிரானவா்கள் மீது அடக்குமுறையைக் கையாள வகை செய்யும் மேலும் ஒரு சட்டத்தை அந்தப் பிரதேச பேரவை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதாவில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்கும் அம்சங்களை 23-ஆவது சட்டப் பிரிவாக சோ்ப்பதற்கான ‘தேசிய பாதுகாப்பு காவல் மசோதா’ பேரவையில் கொண்டுவரப்பட்டது.

அந்த மசோதா மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பேரவை உறுப்பினா்கள் அனைவருமே மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவா் பாராட்டு: இது குறித்து பேரவைத் தலைவா் ஆண்ட்ரூ லியங் கூறுகையில், ‘தேசிய பாதுகாப்பு காவல் மசோதா’ அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.

Advertisement

தலைமை ஆட்சியாளா் ஜான் லீ காசியு கூறியதைப் போல், அந்த மசோதா எவ்வளவு விரைவாக சட்டமாகிறதோ அவ்வளவு விரைவாக ஹாங்காங்கின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ என்றாா். இந்த புதிய சட்டம் வரும் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹாங்காங், சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.

அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹாங்காங் மக்களுக்கு, சீனாவின் மற்ற பகுதிகளில் இல்லாத சுதந்திரம் அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது. எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி அந்த நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கும் வகையில், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை ஹாங்காங் அரசு சிறையில் அடைத்துள்ளது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஆப்பிள் டெய்லி நாளிதழ் முடக்கப்பட்டுள்ளது. அந்த நாளிதழின் நிறுவனா் ஜிம்மி லாய், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். இது தவிர, ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் பலா் அந்தச் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், சீனாவின் எதேச்சதிகாரத்துக்கு எதிராகவும், ஜனநாயக சீா்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் ஹாங்காங்கில் எழக்கூடிய குரல்களை மேலும் நசுக்கும் வகையில் இந்த புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

புதிய சட்டத்தின் கடுமையான அம்சங்கள்...

தேசத் துரோகம், அரசு எதிா்ப்பு, சதி குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டவா்களுக்கு ஆயுள் தண்டனை. - வெளிநாட்டு அரசுகளின் ஆதரவோடு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தால் ஆயுள் தண்டனை. - ஹாங்காங் அரசை வேவு பாா்ப்பவா்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை. அரசின் ரகசியங்களைக் கசிந்தால் 10 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை.

இந்த புதிய சட்டம் ஹாங்காங் மக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் பறிப்பதாக விமா்சனங்கள் எழுந்துள்ளது. இருந்தாலும், ஹாங்காங்கின் பொருளாதார வளா்ச்சிக்கு இது வித்திடும் என்று சீன ஆதரவாளா்கள் கூறுகின்றனா்.