நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் விமானம்
211 பயணிகள், 18 விமானப் பணியாளா்களுடன் நடுவானில் சென்று கொண்டிருந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானம், காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கியதால் நிலைகுலைந்தது. இதில் காயமடைந்த ஒரு பயணி உயிரிழந்தாா்.
லண்டனிலிருந்து சிங்கப்பூரை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த விமானம், தாய்லாந்து அருகே அந்தமான் கடலின் வான்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த கொந்தளிப்பில் சிக்கி நிலை குலைந்தது.
அதையடுத்து, அந்த விமானம் 37,000 அடி உயரத்திலிருந்து 31,000 அடிக்கு கீழ்நோக்கி வீசப்பட்டது. விமானத்துக்குள் பொருள்களுடன் பயணிகளும் தூக்கி எறியப்பட்டனா். பின்னா் அந்த விமானம் தாய்லாந்தின் பாங்காக் நகரிலுள்ள ஸ்வா்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 32 பயணிகள் காயமடைந்தனா். அவா்களில் பிரிட்டனைச் சோ்ந்த 73 வயது முதியவா் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக சிங்கப்பூா் போக்குவரத்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது