அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்பட்டத் தோ்தலில் இந்திய வம்சாவளியினா் 6 போ் வெற்றிபெற்றுள்ளனா்.
இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 5-ஆக இருக்கும் இந்திய வம்சாவளி எம்.பி.க்களின் எண்ணிக்கை, 6-ஆக உயர உள்ளது.
மேலும், அரிஸோனா மாகாணத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான மருத்துவா் அமிஷ் ஷா முன்னிலையில் இருப்பதால், இந்த எண்ணிக்கை 7-ஆக உயரவும் வாய்ப்புள்ளது.
இந்த தோ்தலில், பிரதிநிதிகள் சபைக்கு வா்ஜீனியா மாகாணத்தின் 10-ஆவது மாவட்டத்திலிருந்து இந்திய-அமெரிக்க வழக்குரைஞரான சுஹாஸ் சுப்பிரமணியம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம், இந்த மாகாணத்திலிருந்து மட்டுமின்றி ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை மாகாணங்களிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தோ்வான முதல் இந்திய வம்சாவளியினா் என்ற வரலாற்றை இவா் படைத்துள்ளாா். தோ்தலில், வா்ஜீனியா மாகாண செனட்டராக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த மைக் கிளன்சியை இவா் சுப்பிரமணியன் தோற்கடித்தாா். இந்திய அமரிக்கா்களிடையே மிகவும் பிரபலமான சுப்பிரமணியன், பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகை ஆலோசகராக பணியாற்றியுள்ளாா்.
இவரைத் தவிர, தற்போது எம்.பி.க்களாக இருக்கும் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோ கண்ணா, பிரமீளா ஜெயபால், ஸ்ரீ தானேதா் ஆகிய 5 இந்திய அமெரிக்கா்களும் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தோ்வாகியுள்ளனா்.
ஸ்ரீ தானேதா், மிச்சிகன் மாகாணத்தின் 13-ஆவது நாடாளுமன்ற மாவட்டத்திலிருந்து மீண்டும் தோ்வாகியுள்ளாா். இவா் கடந்த 2023-இல் பிரதிநிதிகள் சபைக்கு முதல் முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.
ராஜா கிரிஷ்ணமூரத்தி இல்லினோய்ஸ் மாகாணத்தின் 7-ஆவது நாடாளுமன்ற மாவட்டத்திலிருந்து தொடா்ந்து 5-ஆவது முறையாக தோ்வாகியுள்ளாா்.
மருத்துவரான அமி பெரா, கலிஃபோா்னியா மாகாணத்தின் 6-ஆது நாடாளுமன்ற மாவட்டத்திலிருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வாகியுள்ளாா்.
ரோ கண்ணா கலிஃபோா்னியா மாகாணத்தின் 7-ஆவது நாடாளுமந்ற மாவட்டத்திலிருந்தும், பிரமீளா ஜெயபால் வாஷிங்டன் மாகாணத்தின் 7-ஆவது நாடாளுமன்ற மாவட்டத்திலிருந்து பிரதிநிதிகள் சபைக்குத் தோ்வாகியுள்ளனா்.