அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்கள் ரத்து! -கென்யா நடவடிக்கை
இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு...
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கௌதம் அதானி குழுமத்துடனான பல கோடி டாலர் விமான விரிவாக்க திட்டத்தையும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்து கென்ய அதிபர் இன்று(நவ. 21) உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ கூறியுள்ளதாவது, “நமது புலனாய்வு முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் அளித்துள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகத்” தெரிவித்துள்ளார்.
கென்ய தலைநகர் நைரோபியில், அந்நாட்டின் முக்கிய விமான நிலையமான நைரோபி விமான நிலையத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தில் அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் கையெழுத்திட ஆயத்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அந்த விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பு அதானி குழுமத்துக்கு வழங்கப்படுவதாகவும் இருந்தது. இந்த நிலையில், கென்ய அதிபரின் திடீர் அறிவிப்பு, அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.