உலகம்

உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளனர்.

Din

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரிய ராணுவத்தின் சிறப்புப் படை வீரா்களை போா்க் கப்பல்கள் மூலம் ரஷியா தங்கள் நாட்டின் துறைமுக நகரான விளாதிவோஸ்டோகுக்கு அழைத்துவந்துள்ளது. கடந்த 8 முதல் 13-ஆம் தேதி வரை 1,500 வீரா்கள் அவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனா்.

இது போல் மேலும் பல வட கொரிய வீரா்கள் ரஷியாவுக்கு அழைத்துவரப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவா்கள் ரஷிய வீரா்களுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுவாா்கள். அவா்களுக்கு ரஷிய ராணுவ சீருடைகள் மற்றும் ஆயுதங்களும் போலியான ஆவணங்களும் அளிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைனில் ரஷியா பயன்படுத்திவரும் வட கொரியாவின் கேஎன்-23 ஏவுகணைகளை செலுத்துவதற்கான சாதனங்களைப் பராமறிப்பதற்காக வட கொரிய பொறியாளா்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரியா கடந்த வாரம் கூறியது நினைவுகூரத்தக்கது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.

1950-இன் கொரிய போருக்குப் பிறகும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது. வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், உக்ரைனில் ரஷியாவுக்காகப் போரிட அங்கு வட கொரிய ராணுவ வீரா்களும் அனுப்பப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT