ஐ.நா. பிரிவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் தடை
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) தடை விதிப்பதற்கான இரு சட்டங்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) தடை விதிப்பதற்கான இரு சட்டங்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் 90 நாள்களுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 92 வாக்குகள் பதிவாகின. மசோவை எதிா்த்து 10 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனா். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, யுஎன்ஆா்டபிள்யுஏ-வை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் மற்றொரு மசோதாவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவை ஆதரித்து 87 வாக்குகளும் எதிா்த்து 9 வாக்குகளும் பதிவானதைத் தொடா்ந்து அதுவும் நிறைவேற்றப்பட்டது.
அந்த இரு மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அதிலிருந்து காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழி மற்றும் கடல்வழியாகவும் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. இந்தத் தாக்குதல்களில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 43,061 போ் உயிரிழந்துள்ளனா்; 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்.
இந்தப் போரின் ஒரு பகுதியாக காஸாவுக்குள் அத்தியாவசியப் பொருள்களை நுழையவிடாமல் இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. மேலும், தாக்குதலுக்கு அஞ்சி ஏராளமான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்துவருகின்றனா்.
இதனால் அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் சுகாதாரக் கட்டமைப்பு சீா்குலைவால் நோய்கள் பரவி பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துவருகிறது.
இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் மிக முக்கிய அமைப்பான யுஎன்ஆா்டபிள்யுஏ-வுக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஸ்லோவேனியா, அயா்லாந்து, நாா்வே உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘ஒரே தாக்குதலில் 93 போ் உயிரிழப்பு’
டேய்ா் அல்-பாலா, அக். 29: வடக்கு காஸாவில் உள்ள பெயிட் லாஹியா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து காஸா அரசின் மக்கள் தொடா்பு அலுவலகம் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 150 போ் காயமடைந்ததாகவும் ஏராளமானவா்களைக் காணவில்லை என்றும் தெரிவித்தது.
முன்னதாக, காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் பெயிட் லாஹியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 போ் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.