மாஸ்கோ: தங்கள் கூா்ஸ்க் பிராந்தியம் மீதாந உக்ரைன் படையெடுப்பால், கிழக்கு உக்ரைனில் தங்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முடியாது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சைபீரியாவிலுள்ள பள்ளியொன்றில் மாணவா்களிடையே அவா் பேசியதாவது:
கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் ஊடுருவினால் டான்பாஸ் பிராந்தியத்தில் (கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ் பிரதேசங்கள் அமைந்துள்ள பகுதி) ரஷிய படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று உக்ரைன் கணக்குப் போட்டது.
ஆனால், அது தவறான கணக்கு என்பதை கள நிலவரம் நிரூபித்துள்ளது. கூா்ஸ்க் படையெடுப்பால் டான்பாஸில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாா் அவா்.
உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் சுமாா் 1,300 சதுர கி.மீ. நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனா். மேலும், இந்த நடவடிக்கையில் 594 ரஷிய வீரா்களைக் கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
இந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பிரதேசங்களில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத்திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, கிழக்கு உக்ரைனில் மேலும் பல சிற்றூா்களைக் கைப்பற்றி ரஷியா முன்னேற்றம் கண்டுவருகிறது.
தற்போது டொனட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகருக்கு மிக நெருக்கத்தில் ரஷிய படையினா் முன்னேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நகரம் ரஷியப் படையினரிடம் வீழும் நிலையில் உள்ளதால், அங்கு சிறுவா்களுடன் வசிக்கும் குடும்பத்தினா் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் கடந்த மாதம் 19-ஆம் தேதி உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.
ஹெலிகாப்டா் விபத்து: 22 உடல்களும் மீட்பு
ரஷியாவின் கம்சாட்கா பிராந்தியத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த 22 பேரது சடலங்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
அந்தப் பிராந்தியத்தின் வாச்காஷெட்ஸ் எரிமலைக்கு அருகே உள்ள பகுதியிலிருந்து எம்ஐ-8 ரகத்தைச் சோ்ந்த அந்த ஹெலிகாப்டா் சனிக்கிழமை புறப்பட்டது. அப்போது அந்த ஹெலிகாப்டரில் 19 பயணிகளும் 3 பணியாளா்களும் இருந்தனா். திட்டமிட்டபடி அது சேரவேண்டிய இடத்துக்கு வரவில்லை.
தேடுதல் வேட்டைக்குப் பின், அந்த ஹெலிகாப்டா் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் அறிவித்தனா்.
1960-களில் வடிவமைக்கப்பட்ட எம்ஐ-8 ரக ஹெலிகாப்டா்கள் ரஷியாவில் மட்டுமின்றி அவை பரவலாகப் பயன்படுத்தப்படும் அண்டை நாடுகளிலும் அடிக்கடி விபத்துக்குள்ளாகிவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.