கமலா ஹாரிஸ் அதிபரானால்.. அமெரிக்கர்களின் கனவு நிறைவேறாது! -எலான் மஸ்க்
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால்.. செவ்வாய் கிரகத்தில் கால்பதிக்க முடியாது! -எலான் மஸ்க்
பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் வேட்பாளா்களான முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் இந்திய நேரப்படி இன்று(செப். 11) அதிகாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலின் சுவாரஸ்யமான விஷயமே தேர்தலில் களமிறங்கும் இருவரும் நேரடி விவாதம் செய்வதுதான்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறார் உலக பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான எலான் மஸ்க்.
தொழிலதிபர் எலான் மஸ்க் புதன்கிழமை(செப். 11) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் செய்யப்படாவிடில், சட்டங்களும் விதிமுறைகளும் ஒவ்வொரு ஆண்டும் மோசமடைந்துகொண்டே போகும்.
மிகப்பெரிய காரியங்களைச் செய்ய, அவற்றுக்கான அனுமதியளிக்கக்கூடிய அரசுக்கு ஆதரவு வழங்குபவராக டிரம்ப் இருப்பார், ஆனால், கமலா அப்படியல்ல.
கமலா வெற்றி பெற்றால் நாம்(அமெரிக்கர்கள்) செவ்வாய் கிரகத்தை சென்றடைய இயலாது” எனப் பதிவிட்டுள்ளார்.