டிரம்ப் - கமலா ஹாரிஸ் விவாதம் Alex Brandon
உலகம்

மீண்டும் விவாதம்! கமலா ஹாரிஸ் அழைப்பை நிராகரித்த டிரம்ப்!

இரண்டாவது நேரடி விவாதத்துக்கு கமலா ஹாரிஸ் அழைத்ததற்கு டிரம்ப்பின் பதில்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் மீண்டும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தோல்வி அடைந்தவர்களே மீண்டும் வாய்ப்பு கேட்பார்கள் என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.

முதல் நேரடி விவாதம்

முன்னதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதன்முதலில் நேரடி விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தில், ஜோ பைடன் பேச வார்த்தைகள் இல்லாமல் சரியான கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். தொடர்ந்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா அறிவிக்கப்பட்டார்.

பைடன் - டிரம்ப் இடையே நடைபெற்ற முதல் விவாதம்.

கமலா - டிரம்ப் விவாதம்

இந்த நிலையில், கமலா ஹாரிஸும் டிரம்பும் பங்கேற்ற முதல் நேரடி விவாதம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இந்த விவாதத்தில், பணவீக்கம், கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து, டிரம்ப் கருத்துகளை முன்வைக்க, ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தியதாகவும், வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்க வைத்தவர் என்றும் கமலா ஹாரிஸ் கருத்துகளை முன்வைத்தார்.

இதில், டிரம்ப் வெற்றி பெற்றதாக ஏபிசி கருத்துக்கணிப்பும், கமலா வெற்றி பெற்றதாக சிஎன்என் கருத்துக்கணிப்பும் வெளியாகின.

மீண்டும் அழைப்பு

இந்த நிலையில், தெற்கு கரோலினாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரிஸ், டிரம்ப்புடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க வாக்காளர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

டிரம்ப் மறுப்பு

ஆனால், கமலா ஹாரிஸின் அழைப்பை டிரம்ப் மறுத்து சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்ததாவது:

“ஒருவர் சண்டையில் தோற்றால், அவர் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை, எனக்கு மறுபோட்டி வேண்டும் என்பதுதான். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி வேட்பாளரான தோழர் கமலா ஹாரிஸுக்கு எதிரான விவாதத்தில், நான் வெற்றி பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் தெரிவிக்கின்றன. அதனால், உடனடியாக இரண்டாவது விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவரும் பைடனும் நாட்டை அழித்துவிட்டனர். லட்சக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் அவர்களால் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும்.

ஜோ பைடனுடன் நடைபெற்ற முதல் விவாதத்தில், மற்ற பிரச்னைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதில் கமலா கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது விவாதம் கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரூப் சோஸியலில் டிரம்ப் வெளியிட்ட பதிவு

நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய நாள், இரண்டாவது விவாதத்துக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT