இலங்கையில் ஆட்சிக்கு வந்தால் அதானி காற்றாலை திட்டம் ரத்து: ஜேவிபி திட்டவட்டம்
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி முன்னணி ஆட்சிக்கு வந்தால், அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ரத்து செய்யப்படும்
கொழும்பு: இலங்கையில் தேசிய மக்கள் சக்தி முன்னணி ஆட்சிக்கு வந்தால், அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ரத்து செய்யப்படும் என்று ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் செப்.21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் ஜனதா விமுக்தி பெரமுனை கட்சித் தலைவர் அனுர குமார திசநாயக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
அந்நாட்டு தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் அனுர குமார பேசுகையில், "இலங்கையின் எரிசக்தி துறை உரிமைக்கு அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் அச்சுறுத்தலாக உள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், அந்தத் திட்டம் ரத்து செய்யப்படும்' என்றார்.