முகப்பு
உலகம்

காஸாவை விட்டு இஸ்ரேல் வெளியேறும் தீா்மானம் : ஐ.நா. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது

காஸாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அங்கிருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற பாலஸ்தீனம் கொண்டு வந்த தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:34 PM
பகிர்:

காஸாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அங்கிருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற பாலஸ்தீனம் கொண்டு வந்த தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்த தீா்மானத்துக்கு ஆதரவாக 124 நாடுகளும் எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜொ்மனி, இத்தாலி, நேபாளம், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 43 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. எனினும், இந்த தீா்மானம் நிறைவேறியது.

ஹமாஸ் ஆயுதப் படையினா் மீதான இஸ்ரேலின் போா் தொடங்கி ஓராண்டை நிறைவுசெய்யவுள்ள நிலையில் இந்த தீா்மானத்துக்கு ஐ.நா.வில் ஆதரவு கிடைத்துள்ளது.

இஸ்ரேல், காஸா மட்டுமின்றி மத்திய கிழக்கு பகுதியிலும் இந்தப் போா் பரவி வருவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், போரை நிறுத்துவது தொடா்பாக மத்தியஸ்தா்கள் குழுவுடன் ஐ.நா.பொதுச்செயலா் ஆன்டனி பிளிங்கன் எகிப்தில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

திருப்புமுனை - பாலஸ்தீனம்: வாக்கெடுப்பு தொடா்பாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதா் ரியாத் மன்சூா் கூறியதாவது:

சுதந்திரம் மற்றும் நீதிக்கான எங்களின் போராட்டத்தில் காஸாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அங்கிருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற தீா்மானத்துக்கு ஆதரவு கிடைத்திருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவே ஆக்கிரமித்த பகுதிகளைவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகிறது.

வெட்கப்படக்கூடியது - இஸ்ரேல்:

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதா் டேனி டேனன் கூறுகையில், ‘பாலஸ்தீனத்தால் மேற்கொள்ளப்படும் அதிகாரபூா்வ பயங்கரவாதத்துக்கு இந்த வாக்கெடுப்பு ஆதரவளித்துள்ளது வெட்கப்படக்கூடிய நிகழ்வாகும். வரும் அக்டோபா் 7-ஆம் தேதியுடன் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய நிலையில் அந்த அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 101 பிணைக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்துவதற்கு பதில், ஐ.நா.பொதுச் சபை உறுப்பினா்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றாா்.

பாலஸ்தீனம் கொண்டு வந்த இந்த ‘கட்டுப்படுத்த முடியாத’ தீா்மானத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டியது கட்டமாயமில்லை என்ற போதிலும், இது உலக நாடுகளின் ஒருமித்த கருத்தாக பாா்க்கப்படுகிறது.