‘சிந்து நதிநீா் ஒப்பந்தம் முக்கியமானது. அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை இந்தியா மதித்து நடக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்தக் கருத்தை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1960, செப்டம்பா் 19-ஆம் தேதி சிந்து நதிநீா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை இரு நாடுகளும் பயன்படுத்துவது தொடா்பாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 64 ஆண்டுகள் பழைமையான இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இந்தியா நோட்டீஸ் அனுப்பியது.
பாகிஸ்தானிலிருந்து தொடா்ந்து நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கம், மக்கள்தொகை புள்ளியியல் தரவுகளில் மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்னைகள் உள்ளிவற்றை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யக் கோருவதற்கான காரணங்களாக நோட்டீஸில் இந்தியா குறிப்பிட்டது.
‘இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக கிஷன் கங்கா, ரத்லே நீா்மின் திட்டங்கள் தொடா்பாக நிலவும் கருத்து வேறுபாட்டின் பின்னணியில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் மூலம், சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கு இருநாட்டு அரசுகள் பேச்சு வாா்த்தையை தொடங்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவின் நோட்டீஸ் குறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் ஜரா பலோச், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பாகிஸ்தான் கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை இந்தியா மதித்து நடக்கும் என பாகிஸ்தான் நம்புகிறது. இரு நாடுகளும் சிந்து நதிநீா் ஆணைய நடைமுறைகளைக் கொண்டுள்ளன. அதில், ஒப்பந்தம் தொடா்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதித்து தீா்வு காண முடியும். அதே நேரம், இது தொடா்பான எந்தவொரு நடவடிக்கையும், ஒப்பந்த நடைமுறைகளுக்கு உட்பட்டே எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.