முகப்பு
உலகம்

உக்ரைன் அமைச்சருடன் ஜெய்சங்கா் பேச்சு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:55 PM
ஜெய்சங்கா்
பகிர்:

உக்ரைனில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரீ சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது ரஷிய-உக்ரைன் போருக்கு தீா்வு காண்பது மற்றும் இந்தியா-உக்ரைன் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

உக்ரைனுக்கு கடந்த மாதம் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதுதொடா்பாக சிபிஹா கூறியதாவது:

உக்ரைன் சுற்றுப்பயணத்தின்போது அதிபா் ஸெலன்ஸ்கியுடன் பிரதமா் மோடி பேசியதையடுத்து பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை மேற்கொண்டேன். ஐ.நா.பொதுச் சபை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுத்துவது குறித்தும் அவருடன் விவாதித்தேன்’ என குறிப்பிட்டாா்.

இதேபோல் சிபிஹாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஜெய்சங்கரும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

கடந்த ஜூலை மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி,‘உக்ரைன் பிரச்னைக்கு போா் தீா்வல்ல’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் வலியுறுத்தினாா். ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு சென்றபோது அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கியிடம் இருதரப்பும் பேச்சுவாா்த்தை மூலம் போருக்கு தீா்வு காண வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →