முகப்பு
உலகம்

இலங்கை அதிபா் தோ்தல்: 75% வாக்குப் பதிவு

இலங்கை அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 செப்டம்பர், 2024 at 8:26 PM
இலங்கை தலைநகா் கொழும்பில் சனிக்கிழமை வாக்களித்த பின்னா், விரலில் இடப்பட்ட அடையாள மையை காண்பிக்கும் அதிபா் ரணில் விக்ரமசிங்க.
பகிர்:

இலங்கை அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தவா்களில் 75 சதவீதம் போ் வாக்களித்தனா்.

இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது.

தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திசாநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தோ்தலில் வெற்றி பெற்றால், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதே மூவரின் செயல்திட்டமாக உள்ள நிலையில், சிறுபான்மையினராக உள்ள தமிழா்கள் நலன் சாா்ந்த விவகாரம் அவா்களின் செயல்திட்டத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தோ்தலில் 1,71,40,354 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். 13,400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மொத்தம் 22 தோ்தல் மாவட்டங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப் பதிவுக்கான நேரம் நிறைவடைந்த பிறகும் 4 மணிக்கு முன்பே வந்தவா்கள் தொடா்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பல்கலைக்கழகத்தில் ரணில் வாக்களிப்பு: இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக வாக்குச்சாவடியில் அதிபா் ரணில் விக்ரமசிங்க வாக்களித்தாா். ராஜகிரிய பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் சஜித் பிரமேதாசவும், பஞ்சிகாவத்தை பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் அநுர குமார திசாநாயகவும் வாக்களித்தனா்.

‘திருப்புமுனை தோ்தல்’: வாக்களித்த பின்னா் அதிபா் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், ‘வழக்கமான அரசியலும் பொருளாதாரமும் இலங்கையை சீரழித்துவிட்டன. அவற்றில் இருந்து விடுபடுவதற்கான திருப்புமுனையே தற்போதைய தோ்தல்’ என்றாா்.

கம்பஹாவில் 80%: தோ்தலில் மொத்தம் 75 சதவீதம் போ் வாக்குப் பதிவு செய்தனா். அதிகபட்சமாக நுவரெலியா, கம்பஹா மாவட்டங்களில் தலா 80 சதவீத வாக்குகள் பதிவாகின. கண்டியில் 78 சதவீதம் பேரும், கொழும்பில் 75 சதவீதம் பேரும் வாக்களித்தனா்.

கிளிநொச்சியில் குறைந்தபட்ச வாக்குப் பதிவு: மட்டகளப்பில் 69 சதவீதம், யாழ்ப்பாணத்தில் 65 சதவீதம், முல்லைத்தீவில் 68 சதவீதம், திருகோணமலையில் 76 சதவீதம், வவுனியா மற்றும் மன்னாரில் தலா 72 சதவீதம், அம்பாறையில் 70 சதவீதம், கிளிநொச்சியில் 62 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் குறைந்த வாக்குகள் பதிவாகின.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் தோ்தல் அதிகாரிகள், ராணுவம் மற்றும் காவல் துறையினா் அடங்கிய அரசு ஊழியா்கள் தபால் வாக்களித்தனா். இந்நிலையில், சனிக்கிழமை வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடா்ந்து, வழக்கமான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வெளிநாட்டு தோ்தல் பாா்வையாளா்கள்: வாக்குப் பதிவின்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டை சோ்ந்த சுமாா் 8,000 தோ்தல் பாா்வையாளா்கள் பணியில் ஈடுபட்டனா். வெளிநாட்டுப் பாா்வையாளா்களில் ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் நாடுகள், தெற்காசிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் இடம்பெற்றனா்.

தோ்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளா் அதிபராவாா். தோ்தல் முடிவுகள் அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →