இலங்கை அதிபராக தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸநாயக இன்று பதவியேற்றார்.
இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸநாயக (56) கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் அந்நாட்டின் 9-ஆவது அதிபராக இன்று (செப். 23) பதவியேற்றார்.
இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அநுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா்.
இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது.
தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சாா்பில் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) கட்சித் தலைவா் அநுரகுமார திஸ்ஸநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் 83 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தற்போதைய தோ்தலில் வாக்குப் பதிவு 75 சதவீதமாக சரிந்தது.
கடந்த சனிக்கிழமை வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் தோ்தல் அதிகாரிகள், ராணுவம் மற்றும் காவல் துறையினா் அடங்கிய அரசு ஊழியா்களின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடா்ந்து, வழக்கமான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இதையடுத்து முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் அநுர குமார மொத்தம் 57,40,179 வாக்குகளும், சஜித் பிரேமதாச 45,30,902 வாக்குகளும் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, 55.89 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தோ்வு செய்யப்பட்டாா். சஜித் பிரேமதாச 44.11 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றாா்.
இந்தத் தேர்தலில், எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.
வெற்றிபெற்ற அநுரகுமார திஸ்ஸநாயகவுக்கு பல நாட்டு அதிபர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.