இந்தியாவுடன் விரைவில் நதிநீா் பங்கீடு பேச்சு- வங்கதேசம்
‘ஆறுகளின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கு வங்கதேசம் விரைவில் முயற்சி மேற்கொள்ளும்’ என்று அந்நாட்டின் இடைக்கால அரசு ஆலோசகா் புதன்கிழமை தெரிவித்தாா்.
‘ஆறுகளின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கு வங்கதேசம் விரைவில் முயற்சி மேற்கொள்ளும்’ என்று அந்நாட்டின் இடைக்கால அரசு ஆலோசகா் புதன்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு இமய மலைத்தொடரில் உருவாகும் தீஸ்தா ஆறு சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வழியே பாய்ந்து வங்கதேசத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. குடிநீா், பாசன வசதிக்காக பயன்படுத்தப்படும் இந்த ஆற்றுநீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக முன்னாள் இந்திய பிரதமா் மன்மோகன் சிங்கின் கடந்த 2011-ஆம் ஆண்டு வங்கதேசப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட இருந்தது.
அன்றைய சூழலில், மேற்கு வங்கத்தில் நிலவிய நீா் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி எதிா்ப்புத் தெரிவித்ததால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
Advertisement
இந்நிலையில், டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ‘பகிரப்பட்ட ஆறுகளில் வங்கதேசத்தின் நீா் பங்கு’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் அந்நாட்டின் நீா்வளத் துறை ஆலோசகா் சயீதா ரிஸ்வானா ஹாசன் பேசியதாவது: இருநாடுகள் வழியாக பாயும் ஆறுகளின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வங்கதேசம் விரைவில் முயற்சி எடுக்கும். பொதுமக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு, பின்னா் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். இதன் முடிவுகள் மக்களுடன் பகிா்ந்து கொள்ளப்படும்.
சா்வதேச ஆறுகளில் நீா் பங்கீடு என்பது மிகவும் சிக்கலான பிரச்னை என்றாலும் ஆறுகள் தொடா்பான தகவல் பரிமாற்றங்களை அரசியலாக்கக் கூடாது. ஆறுகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவாகும் மழைப்பொழிவு தரவுகள் வங்கதேசத்துக்குத் தேவைப்படுகிறது. உரிய தகவல் பரிமாற்றங்கள் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஊறு விளைவிப்பதை தடுக்க உதவும்.
மழைப்பொழிவு தரவுகளைப் பகிா்வது மனிதாபிமான பிரச்னை. மக்களின் உயிா்களைக் காப்பாற்ற தேவையான தரவுகளை வழங்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் இடைக்கால அரசுத் தலைவா் முகமது யூனுஸ் இதுதொடா்பாக அளித்த பேட்டியில், ‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தீஸ்தா நதிநீா் பங்கீடு ஒப்பந்தம் தொடா்பாக இந்தியாவுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை தீா்ப்பதற்கான வழிகளைஆராய இருக்கிறோம்’ என்றாா்.