கொழும்பு: இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார்.
பாங்காக் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து நேற்று இரவு இலங்கை சென்றார். இலங்கையில், அந்நாட்டு அதிபருடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அதிபர் அநுர குமார திசநாயக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.
அதாவது, செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பிரதமர் மோடி கூறினார்.
அதாவது, நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறுஎதுவும் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்று விளக்கமும் பிரதமர் மோடி அளித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, அதன் நிறைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கொழும்பில் பேசிய பிரதமர் மோடி, இலங்கைக்கு இந்தியா இக்கட்டான காலக்கட்டங்களில் உதவியிருக்கிறது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் என இந்தியா உதவியிருக்கிறது. அது மட்டுமல்ல, பொருளாதரா நெருக்கடியில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றதை இங்கே நினைவுகூர்கிறேன் என்றார்.
இலங்கையின் அனுராதபுரத்தில் தனது பயணத்தை ஞாயிறுக்கிழமை முற்பகலில் நிறைவு செய்யும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து தமிழகத்தின் மண்டபம் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.