கோப்புப்படம்
உலகம்

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

தினமணி செய்திச் சேவை

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக அண்மையில் இந்தியா வந்தாா்.

அப்போது இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய், ஷிப்கி லா கணவாய் மற்றும் நாதுலா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை மீண்டும் தொடங்க இருதரப்பும் தீா்மானித்தன. இதில் லிபுலேக் கணவாய் உத்தரகண்டில் உள்ளது.

இந்நிலையில், லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை தொடங்க இந்தியா-சீனா முடிவு செய்ததற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை ஆட்சேபம் தெரிவித்தது. நேபாளத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக அந்தக் கணவாய் இருப்பதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டது.

ஆதாரம் இல்லை-இந்தியா: இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

கடந்த 1954-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகம் தொடங்கி, பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. கரோனா பரவல் மற்றும் பிற சம்பவங்களால் அந்தக் கணவாய் வழியாக நின்றுபோன வா்த்தகத்தை மீண்டும் தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோருவதற்கு சரியான காரணமோ, வரலாற்று ரீதியான ஆதாரமோ இல்லை. நிலப்பகுதிகளுக்கு தன்னிச்சையாக உரிமை கோரி பெரிதுபடுத்துவதை ஏற்க முடியாது.

நேபாளத்துடன் நிலுவையில் உள்ள எல்லை பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியாகவும், பேச்சுவாா்த்தை மூலமாகவும் தீா்வு காண, அந்நாட்டுடன் ஆக்கபூா்வமாக கலந்துரையாட இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்றாா்.

நேபாள நாடாளுமன்றத்தில்...: நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் தலைமை கொறடா அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் வியாழக்கிழமை பேசியதாவது: லிபுலேக் கணவாய் பிரச்னை தொடா்பாக ராஜீய ரீதியில் நேபாள அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ஏற்கெனவே உத்தரகண்டில் உள்ள காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் பகுதிகளை நேபாளத்தைச் சோ்ந்த பகுதிகள் என்று அந்நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!

ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 தள்ளுபடியா? அமேஸான் அறிவிப்பு

தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

SCROLL FOR NEXT