அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் புதிய சுங்க விதிகளால், 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்களுக்கான அஞ்சல் சேவையை மட்டும் இந்திய அஞ்சல் துறை நிறுத்தியிருந்தது. ஆனால் தற்போது, அனைத்து வகை அஞ்சல்களின் முன்பதிவையும் முழுமையாக நிறுத்துவதாக புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக. 2-ஆம் தேதி வெளியான அறிவிப்பின் தொடா்ச்சியாக, அஞ்சல் முன்பதிவு நிறுத்தம் குறித்து அஞ்சல் துறை ஆய்வு மேற்கொண்டது. புதிய விதிகளுக்கான தெளிவான வழிமுறைகள் இல்லாததால், அமெரிக்காவுக்கான அஞ்சல்களை விமான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால், கடிதங்கள், ஆவணங்கள், 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் உள்பட அனைத்து அஞ்சல் சேவைகளின் முன்பதிவும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையை அஞ்சல் துறை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், சேவைகளை மீண்டும் தொடங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்து, அஞ்சல் அனுப்ப முடியாத வாடிக்கையாளா்கள், செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிா்வாகம் கடந்த ஜூலை 30 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, ஆக. 29-ஆம் தேதிமுதல் அமெரிக்காவுக்கு அஞ்சலில் அனுப்பப்படும் 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருள்களுக்குச் சுங்க வரி விதிக்கப்படும். இதன்படி, சா்வதேச அஞ்சல் சேவையில் அமெரிக்காவுக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் விமான நிறுவனங்கள் அல்லது அமெரிக்க சுங்கத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநா்கள், அந்தப் பொருள்களுக்கான வரியை வசூலித்துச் செலுத்த வேண்டும்.
அமெரிக்க சுங்கத் துறை கடந்த ஆக. 15-ஆம் தேதி இதுகுறித்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநா்களை நியமிப்பது மற்றும் வரி வசூலிப்பதற்கான வழிமுறைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இதன்காரணமாக, ஆக. 25 முதல் அமெரிக்காவுக்குச் செல்லும் விமான நிறுவனங்கள் அஞ்சல் பொருள்களை ஏற்க மறுத்துவிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.