டிட்வா புயல் காரணமாக கனமழை மற்றும் வெள்ளம், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை மீட்டுள்ளது.
துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வந்து அங்கிருந்து இந்தியா திரும்ப இருந்த 150 தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக உணவின்றி தவித்து வந்தனர்.
கொழும்புவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய விமானப் படை விமானம் ஒன்று திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு இயக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் ஐஎல்-76 மற்றும் சி-130 ரக விமானங்கள், இலங்கைக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல இலங்கை சென்றிருந்த நிலையில், அதன் மூலம், இலங்கையில் சிக்கித்தவித்து வந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு வந்தடைந்தன. இந்த தகவலை, பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இலங்கைக்கு மீட்புப் பொருள்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஐஎல்-76 மற்றும் சி-130ஜே கனரக விமானங்கள் அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்திய பயணிகளை பாதுகாப்பாக மீட்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.