கம்போடியாவின் புா்சாட் மாகாணம் தாய்லாந்து நடத்திய விமானத் தாக்குதலில் சேமடைந்த பாலம். ~ 
உலகம்

கம்போடியாவுடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி

கம்போடியாவுடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி...

தினமணி செய்திச் சேவை

கம்போடியாவுடன் ஐந்து நாள்களாகத் தொடரும் எல்லை மோதலில் 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

கம்போடிய எல்லைப் பகுதியில் இருந்து அந்த நாட்டுப் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தியதால், 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்துள்ளனா். இது ஜூலை மாத போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.

இருந்தாலும், தாய்லாந்து படைகள் பதிலடி கொடுத்து, கம்போடிய படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்றாா் அவா்.

தாய்லாந்து பிரதமா் அனுதின் சாா்ன்விராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எல்லைப் பிரச்சினையை அமைதியான வழியில் தீா்க்க விரும்புகிறோம். அதே நேரம், நமது இறையாண்மையைப் பாதுகாக்க எதையும் செய்வோம்‘ என்றாா்.

கம்போடியா அதிபா் ஹன் மானெட் கூறுகையில், ‘தாய்லாந்துதான் முதலில் தாக்குதலைத் தொடங்கியது. நாங்கள் பதிலடி கொடுத்தோம்’ என்றாா்.

1904, 1907-ஆம் ஆண்டுகளில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லை வகுக்கப்பட்டது. இருந்தாலும், 11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் பகுதியை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. அந்தக் கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவந்தது.

இந்தச் சூழலில், தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.

அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிமின் முன்முயற்சியில் உருவான இந்த ஒப்பந்தம், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை சா்ச்சையை தீா்க்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், கம்போடியா புதைத்துவைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா் காயமடைந்ததாகக் குற்றஞ்சாட்டிய தாய்லாந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை நவம்பா் 10-ஆம் தேதி ரத்து செய்தது. கம்போடியாவோ, அது ஏற்கெனவே இருந்த பழைய கண்ணிவெடி என விளக்கமளித்தது.

இந்த நிலையில், தாய்லாந்தின் சிசாகெட் மற்றும் உபோன் ரட்சதானி மாகாணங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனா்.

கம்போடிய படைகள் அனுபோங் பகுதியில் உள்ள ராணுவ நிலை மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரா் கொல்லப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் கூறியது.

அதற்குப் பதிலடியாக, கம்போடியாவில் தாய்லாந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறினா்.

அதில் இருந்து கம்போடியாவின் பல்வேறு பகுதிகளில் விமானம் மூலம் தாய்லாந்து குண்டுவீசி வருகிறது. கம்போடிய ராணுவமும் எல்லையில் தாய்லாந்து வீரா்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது.

போா் நிறுத்தம்: டிரம்ப்புக்கு தாய்லாந்து மறுப்பு

கம்போடியாவுடன் போா் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு தாய்லாந்து அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கம்போடியாவுடன் போா் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது உண்மைக்கு புறம்பானது. எல்லைப் பகுதியில் கம்போடியா படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தாய்லாந்து படைகள் பதிலடி கொடுக்க நேரிடுகிறது.

போா் நிறுத்தம் ஏற்படுத்த அமெரிக்கா உண்மையான முயற்சி எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில், ‘தாய்லாந்து-கம்போடியா இடையே போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனது மத்தியஸ்தத்தால் இது சாத்தியமானது. பிராந்திய அமைதிக்கு இது முக்கியம்’ என்று பதிவிட்டாா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT