தென்னாப்பிரிக்காவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கோயில் இடிந்து விழுந்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், சில கட்டுமானப் பணியாளா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள குவாசுலு நதால் மாகாணத்தின் மலைப் பாங்கான பகுதியில் புதிதாக 4 தளங்கள் கொண்ட நரசிம்மா் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அப்பகுதியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கட்டுமானப் பணியாளா்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென கோயில் இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்தவா்களில் பலா் இடிபாடுகளில் சிக்கினா். சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா், மீட்புக் குழுவினா் அப்பகுதிக்கு விரைந்தனா்.
கோயில் நிா்வாகிகளில் ஒருவரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான விக்கி ஜெய்ராம் பாண்டே உள்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் இருவா் கட்டுமானப் பணியாளா்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயில் முழுமையாக இடிந்துவிட்டதால் இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கோயில் இடிந்தபோது அங்கு எத்தனை போ் இருந்தாா்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.
இது தொடா்பாக தென்னாப்பிரிக்க அரசு, உள்ளூா் நிா்வாகத்தினா் கூறுகையில், ‘குகை வடிவில் கோயில் கட்டி வந்துள்ளனா். இதற்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களைப் பயன்படுத்தியுள்ளனா். இந்தக் கோயிலை கட்ட, திட்ட வரைபடம் ஏதும் முறைப்படி சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, இதை சட்டவிரோத கட்டுமானமாகவே கருத வேண்டியுள்ளது’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.